ETR.FM

அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்!

20.11.2026 09:43 2 நிமிட வாசிப்பு

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2027 வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காததன் காரணமாக, இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தீர்மானித்துள்ளது.

 

அதற்கமைய, 20 நிறைவேற்று சேவைகளைச் சேர்ந்த தொழில்வல்லுநர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணையவுள்ளதாக அக்குழுவின் தலைவர் எச்.ஏ.எல். உதயசிறி தெரிவித்தார்.

அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட சில துறைகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளது. அதற்குச் இணையாக 20 இற்கும் மேற்பட்ட சேவைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

பொறியியலாளர் சேவை, ஆயுர்வேத வைத்திய சேவை, மத்திய நிர்வாக சேவை, விஞ்ஞான சேவை, அதேபோன்று நில அளவையாளர் சேவை, தொழில்நுட்பக் கல்விச் சேவை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், தொழில் திணைக்களம், ரயில்வே திணைக்களம் எனப் பல நிறைவேற்று சேவைகள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இந்த நிறைவேற்று சேவைகளுக்கு பாரிய சம்பள முரண்பாடு ஏற்பட்டது. அந்த முரண்பாட்டை நீக்குவதாக தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், அந்த முரண்பாடு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த, ஏற்கனவே சம்பள உயர்வு வழங்கப்பட்ட சேவைகளுக்கே இந்த வரவு செலவுத் திட்டத்திலும் மீண்டும் பாரிய சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே இருந்த சம்பள முரண்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

இதனை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் செய்த பாரிய தவறாகவே நாம் பார்க்கிறோம். இந்த வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போதே இதனை உடனடியாகத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த நாடளாவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்